tamiltraditional.cf

Home | Sign Up | Log In
ஞாயிறு, 2024-11-10, 10:42 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » தமிழர் வரலாறு [ Add new entry ]

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது ...See More
2012-12-15, 2:55 AM
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் அனேக இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது...' என மழைக் காலங்களில் தினமும் நம் கவனத்தைக் கவரும் சென்னை வா
னிலை ஆய்வு மையத்தின் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதிகபட்சம் 100 ஆண்டுகள் இருக்கலாம் என்று நினைத்தால் அது தவறு.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை திருப்பத்தில் சற்றே உள்ளடங்கி இருக்கும் இந்த ஆய்வு மையம் சுமார் 220 ஆண்டுகள் பழமையானது. ஐரோப்பாவிற்கு வெளியே அமைக்கப்பட்ட முதல் நவீன வானியல் ஆய்வகம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. இதற்கான ஆரம்பப் புள்ளியை வைத்தவர் வில்லியம் பெட்ரீ (William Petrie) என்ற கிழக்கிந்திய கம்பெனி ஊழியர்.

வில்லியம் பெட்ரீ வான சாஸ்திரத்தில் தனக்கிருந்த அதீத ஆர்வம் காரணமாக, 1787இல் தன் நுங்கம்பாக்கம் வீட்டிலேயே சொந்த செலவில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவினார். ஓய்வு நேரத்தை அங்கேயே செலவிட்டார். அப்போது அவரிடம் மூன்று அங்குல தொலைநோக்கிகள் இரண்டு, வானியல் கடிகாரங்கள் இரண்டு, நட்சத்திரங்களின் இடங்களை கண்காணிக்க உதவும் கருவி ஒன்று என வெகுசில உபகரணங்களே இருந்தன. இவற்றைக் கொண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கப்பல்களுக்கு அவர் வழிகாட்டி உதவினார்.

ஒருமுறை பெட்ரீ நீண்ட விடுமுறையில் இங்கிலாந்து சென்றபோது, தனது உபகரணங்களை உபயோகிக்க அரசுக்கு அனுமதி அளித்தார். பின்னர் அவர் மெட்ராஸ் திரும்பியபோது, அரசே ஒரு வானிலை ஆய்வுக் கூடத்தை நிறுவி அதை நிர்வகிக்கும் பொறுப்பை பெட்ரீயிடம் கொடுத்தது. மெட்ராஸ் அப்சர்வேட்டரி (Madras Observatory) எனப் பெயரிடப்பட்ட அந்த ஆய்வு மையத்தை அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் சர் சார்லஸ் 1792இல் தொடங்கி வைத்தார்.

மைக்கேல் டோப்பிங் ஆர்ச் (Micheal Topping Arch) என்ற வானியல் ஆய்வாளர் இதனை வடிவமைக்க பெரிதும் உதவினார். வானிலை ஆய்வுக்கு தேவையான பல்வேறு உபகரணங்களையும் அவர் தருவித்தார். இதன் நினைவாக இங்கிருக்கும் 15 அடி உயர கிரானைட் தூணில் அவரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூணில்தான் நட்சத்திரங்களை கண்காணிக்கும் தொலைநோக்கிக் கருவி முதன்முதலில் பொருத்தப்பட்டிருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் வருபவர்களும் அறிந்துகொள்வதற்காக...' என்ற குறிப்புடன் இந்த தூணில் லத்தீன், தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளில் இதுபற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த தூண் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1796இல் தான் இங்கு முதன்முறையாக வானியல் நிகழ்வுகளை முறையாகப் பதிவு செய்யும் வழக்கம் தொடங்கியது. கோல்டிங்ஹாம் (Goldingham) என்பவர்தான் இவ்வாறு பதிவு செய்த முதல் வானியல் ஆய்வாளர். இவரைத் தொடர்ந்து நிறைய புகழ்பெற்ற ஆய்வாளர்கள் இங்கு பணியாற்றி உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் போக்சன் (Pogson). சுமார் 30 ஆண்டுகள், இவர் மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் ஆய்வாளராக இருந்தார். இவரது மனைவியும், மகளும் கூட இவருடைய பணியில் உதவியாக இருந்தனர்.

19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தெரிந்த முழு சூரிய கிரகணங்களை கண்காணித்து பதிவு செய்ததில் இந்த ஆய்வு மையம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது. 1867இல் இந்த மையத்தை மூடுவது பற்றி லண்டனில் விவாதிக்கப்பட்டது. அப்போது தென் பகுதியில் பிரிட்டாஷார் வேறு சில ஆய்வகங்களைத் தொடங்கி இருந்ததுதான் காரணம். மெட்ராஸ் அபசர்வேட்டரி நிறைய விஷயங்களை சேகரித்து வைத்திருந்ததால், புதிய விஷயங்களை சேகரிப்பதை நிறுத்திவிட்டு, கையில் இருக்கும் விஷயங்களை பதிப்பிப்பதில் கவனம் செலுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில்தான் 20 அங்குல தொலைநோக்கி ஒன்றை தமிழக மலைகளில் ஏதாவது ஒன்றில் பொருத்தி வானியல் நிகழ்வுகளை ஆராயலாம் என போக்சன் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் நீலகிரி மற்றும் பழனி மலைகளில் இடம்பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பயனாகத்தான் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி கட்டப்பட்டது. இதன் பிறகு, மெட்ராஸ் அப்சர்வேட்டரியின் பணிகள் அங்கு இடம்மாறின. இதனையடுத்து இந்த மையத்தின் முக்கியத்துவம் மெல்ல குறையத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் 1945இல் சென்னையில் மண்டல வானிலை ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றிற்கான வானிலை அறிக்கைகளை இந்த மையம் தற்போது வெளியிட்டு வருகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனி மனிதனுக்கு உண்டான ஆர்வம், பெருமழை, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவற்றில் இருந்து இன்று நம்மை தற்காத்துக் கொள்ள உதவுகிறது.

* வில்லியம் பெட்ரீ 1807இல் மூன்று மாத காலம் மெட்ராசின் ஆளுநராக இருந்திருக்கிறார்.

* இந்த ஆய்வு மையத்தில் மணிக்கொரு முறை வானியல் நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் முறை 1840இல் தொடங்கியது

*தீர்க்க ரேகை போன்ற விஷயங்களில் மெட்ராஸ் அப்சர்வேட்டரி அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்திய வரைபடம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படம்: சென்னை வானிலை நடுவம், 1880
Category: தமிழர் வரலாறு | Added by: pandu
Views: 535 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2024 | Make a free website with uCoz