tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2025-07-04, 1:35 PM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » தமிழர் வரலாறு [ Add new entry ]

நீராபத்து ...See More
2012-12-14, 6:17 PM
நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும் .

அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.

இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும்.

தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன.
இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும்,விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன.

இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது.

÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது.

நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.
Category: தமிழர் வரலாறு | Added by: pandu
Views: 421 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz