tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வியாழன், 2025-07-17, 9:49 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » தமிழர் வரலாறு [ Add new entry ]

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ...See More
2012-12-14, 3:52 PM
திருச்சிராப்பள்ளி என்றாலே மலைக் கோட்டைதான் நம் நினைவுக்கு வரும். காவிரிக்கரையில் அமைந்துள்ள அழகான நகரம். திருச்சியை அடுத்துள்ள கொள்ளிடமும், திருவரங்கமும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்கள். துப்பாக
்கித் தொழிற்சாலையு ம், பொன்மலை இரயில்வே பணிமனையும், பொறியியல் கல்லூரியும் இந்நகரின் பிரமாண்டமான சிறப்புகள் தாயுமானவர் வாழ்ந்த பூமி இது.

தென்னகத்தின் மத்தியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ள காரணத்தால், தென்னகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்ட அத்தனைப் பேரரசுகளின் ஆதிக்கத்திலும் பரந்தும் குறுகியும் இம்மாவட்டம் விளங்கியது. சேர, சோழ, பாண்டியர்களாலும், விஜய நகரப் பேரரசாலும் பாளையக்காரர்களாலும் திருச்சி மாவட்டம் ஆளப்பட்டது. ஆங்கிலேயர்களின் நிலையான ஆட்சி அமைந்த பிறகே, இம்மாவட்டத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படத் தொடங்கின. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.

வடக்கில் பெரம்பலூர் மாவட்டத்தையும், கிழக்கில் பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், தெற்கில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை மாவட்டங்களையும், வட மேற்கில் நாமக்கல் மாவட்டத்தையும், மேற்கில் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களையும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் எல்லைகளாகக் கொண்டுள்ளது.


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பிற முக்கிய இடங்கள்..

மலைக்கோட்டை:

உலகிலேயே மிகப் பழமையான பாறை என்ற பெருமை உடையது. 83 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டைப் பாறை, 3800 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை என்று கருதப்படுகிறது. ஒரு மில்லியன் ஆண்டு என்றால் 10 லட்சம் ஆண்டுகள். கிரீன்லாந்து, இமயமலைப் பாறைகளைவிட பழமையானது!. 344 படிகள் கொண்ட பாறையில் ஏறிச் சென்றால், ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம். இங்குதான் உச்சிப்பிள்ளையார் கோயில் இருக்கிறது. இங்கு பாறையிலிருந்து லிங்கவடிவில் தோன்றி காட்சி அளிக்கும் தாயுமானவர் கோயிலும் உள்ளது. இக்கோயிலுக்குக் கீழே 6 , 7 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல்லவர்காலக் குகைக் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் அற்புதமான கலைச் சிற்பங்கள் உள்ளன. மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கும். இதன் அருகில் ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் வாழ்ந்த இல்லம். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. இங்கு சிறந்த சிற்பங்கள், வெண்கலச் சிலைகள் உள்ளன. திங்கள் கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர, மற்ற நாட்களில் திறந்திருக்கும்.பார்வைநேரம்: - காலை 8-1 மணி வரை மாலை 2-5 மணி வரை.

புத்தமதம் செழித்த பூமி:

சோழ மண்டலத்தின் தலைநகராக விளங்கிய உறையூரில் ஆச்சாரிய புத்ததத்த மகாதேரர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அப்போது இந்த ஊருக்கு வருகபுரம் என்ற பெயர் இருந்துள்ளது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் மதுரந்தாய் விலாசினி, அபிதவத்தரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்நூல்களில், சோழநாட்டின் சிறப்பு, பூம்புகார், பூதமங்கலம் போன்ற பகுதிகளின் சிறப்புகள் பற்றி எழுதியுள்ளார். முசிறியில் இருந்து 15 கி.மீ. வடகிழக்கிலும், துறையூரிலிருந்து 15 கி.மீ. தென்மேற்கிலும் உள்ள மங்கலம் கிராமத்தில் இருக்கும் அரவான் கோயிலில் 6 அடி உயர கற்சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் பீடத்தில் மூன்று சிங்கமுகங்கள் உள்ளன.
கல்லணை:

கரிகால் சோழனால் கட்டப்பட்ட மிகப்பரிய அணை. 329 மீட்டர் நீளமும், 20 மீ அகலமும் கொண்ட இந்த அணை, இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மேற்புறத்தில் போடப்பட்ட சாலை மட்டும் பிற்காலத்தில் போடப்பட்டது. தமிழர்கள் பண்டைக் காலத்திலேயே பொறியியல் தொழில்நுட்பத்தில் வல்லுநர்களாகத் திகழ்ந்ததற்கு இந்த அணை அழிக்கமுடியாத காட்சி.

அரசு அருங்காட்சியகம்:

பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் மகாவீரர், புத்தர், விஷ்ணு சிலை உள்ளிட்ட பல அற்புதங்கள் காட்சிக்கு உள்ளன. வெள்ளியன்று மட்டும் விடுமுறை.

லாடர்ஸ் தேவாலயம்:

மலைக்கோட்டை தெப்பக்குளத்தருகே அமைந்துள்ளது. சர்ச் ஆஃப் லேடி லாடர்ஸ் என்று அழைக்கப்படும் இந்தத் தேவாலயம், தெற்கு பிரான்சில் உள்ள உலகப்புகழ்பெற்ற பசில்லிகா ஆஃப் லாடர்ஸ் தேவாலயத்தின் அசல் வார்ப்பாக இது உள்ளது.


முக்கொம்பு:

திருச்சியிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த முக்கொம்பு அணைக்கட்டு. காவிரியின் நடுவில் தீவுபோல் உள்ள ஸ்ரீரங்கத்தின் தலைப்பகுதியில் மூன்று பிரிவுகளாகக் கட்டப்பட்டுள்ள அணைக்கட்டின் நீளம், 685 மீ. 19 ஆம் நூற்றாண்டில் கொள்ளிடத்தின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.


பச்சைமலை:

திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவில் பச்சைப்பசேலென உயர்ந்து நிற்கும் மலை.



கோளரங்கம்:

திருச்சியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் புதுக்கோட்டை செல்லும் வழியில், விமான நிலையம் அருகே உள்ளது. தினமும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன.

தமிழில் காலை 10.30, பகல் 1 மணி, மாலை 3.30 மணிக்கும், ஆங்கிலத்தில் காலை 11.45, பகல் 2.15 மணிக்கும், மாலை 4.45 மணிக்கும் காட்டப்படுகின்றன.

புளியஞ்சோலை:

திருச்சியிலிருந்து 72 கி.மீ தொலையில் உள்ள நீரோடைகளும், சிற்றருவிகளும் நிறைந்த பசுமையான வெளி இது. ஒரு நாள் சுற்றுலாவுக்கு உகந்த இடம்.


ஊமையன் (திருமயம்) கோட்டை:

இராமநாதபுரம் மன்னர் சேதுபதியால் 1687இல் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இங்குள்ள சிவன் கோயிலில் இசைபற்றிய கல்வெட்டுகள் உள்ளன. விடுதலைப் போராட்ட வீரர்களை ஆங்கிலேயர் அரசு இந்தக் கோட்டையில்தான் சிறைவைத்தது.

சமயபுரம்:

திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். அம்மன் பக்தர்கள் மத்தியில் இந்தக் கோயில் பிரபலம். இந்தியாவன் சக்தி பீடங்களில் ஒன்றாகவே இம்மாரியம்மன் கோயில் கருதப்படுகிறது.

திருவரங்கம்:

காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடைப்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்பில் திருவரங்கம் என்ற இந்தத் தீவு நகரம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இவ்வூரில்தான் 7 பிரமாண்ட மதில் சுவர்களுடன் 21 கோபுரங்களும் கொண்ட ரங்கநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 72 மீ. உயரமுள்ள இதன் இராஜ கோபுரம் தான் இந்தியாவிலேயே பெரிய கோபுரம். இந்தக் கோபுரம் 13 அடுக்குகள் கொண்டது. மற்ற கோபுரங்கள் அனைத்துமே 14 மற்றும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. தொடக்கக் காலத்தில் சாதாரணமாக இருந்த இக்கோயிலை, சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், ஹெய்சலர்கள், விஜயநகர அரசர்கள், மதுரை நாயக்கர்கள் என்று அடுத்தடுத்து வந்த பல்வேறு மன்னர்களும் விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர்.

திருக்கோகர்ணேஸ்வரர் ஆலயம்:

குடைவரைக் கோயிலான இது, மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது.


திருவானைக்காவல்:

திருச்சியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. பஞ்ச பூதங்களில், நீராக இருக்கும் இறைவன் தான் இங்கு ஜம்புகேஸ்வரனாக எழுந்தருளியுள்ளார். இக்கோயிலுக்கு 5 சுற்றுச் சுவர்களும் 7 கோபுரங்களும் உள்ளன. இக்கோயிலின் லிங்க வடிவ மூலவர் பாதி நீரில் நனைந்தபடியே காட்சித் தருகிறார். கருவறையில் உள்ள நீருற்றே இதற்குக் காரணம். திருவரங்கக் கோயில் கட்டப்பட்டபோதே இந்தக் கோயிலும் கட்டப்பட்டுள்ளது.


திருவெள்ளாறை:

திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீபுண்டரீகாக்க்ஷ பெருமாள் இங்கு கோயில் கொண்டு உள்ளார். 108 திவ்ய தேசங்களில் இதுவே மிகப்பழமையான கோயிலாகும். இக்கோயிலின் மங்களா சாசனத்தைப் பெரியாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் செய்துள்ளனர். இக்கோயிலின் குளம் ஸ்வஸ்திக் சின்ன வடிவில் அமைந்துள்ளது.


வயலூர்:

திருச்சியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அழகன் முருகனின் திருக்கோயில். திருமுருகக் கிருபானந்தவாரியாரின் மனம் கவர்ந்த திருக்கோயில்.


உறையூர்:

முற்காலச் சோழர்களின் தலைநகர் இதுதான். பழைமையான அந்த நகரம் மணற்புயலால் அழிந்து போனதாகக் கருதப்படுகிறது. புகழ்சோழ நாயனார், கோச்செங்கண் சோழன், திருப்பாணாழ்வார் ஆகியோர் பிறந்த ஊர். இங்குள்ள 78 மாடக் கோயிலை செங்கண் சோழன் கட்டியுள்ளனர்.

நாதிர் ஷா தர்கா:

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தர்கா. இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்றான இங்கு 'உர்ஸ்' என்ற திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
Category: தமிழர் வரலாறு | Added by: pandu
Views: 466 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz