tamiltraditional.cf

Home | Sign Up | Log In
வெள்ளி, 2025-07-04, 11:46 AM
Welcome Guest | RSS
Site menu
Section categories
தமிழர் வரலாறு [57]
மருத்துவ குணம் [20]
திருக்குறள் [34]
யோகாசனம்
தமிழ்மொழி
உடல்நலம்
சிறுவர் உலகம்
பெண்கள் உலகம்
Home » Files » தமிழ் மொழி » தமிழர் வரலாறு [ Add new entry ]

சங்க இலக்கியத்தில் வானியல் ...See More
2012-12-14, 2:57 PM
மனிதனின் அறிவியல் பிரிவின் ஒரு கூறே வானியல். இன்றைக்கு வானியலின் வளர்ச்சி மனிதனை வேற்று கிரகவாசிகளாக மாற்றும் அளவுக்கு உயர்த்தியுள்ளது. ஸ்பிரிட், ஆப்பர்சினிட்டி ஆகிய விண்கலங்கள் செவ்வாய்க் கோளை ஆராய மனிதனால் ஏவப் பட்டவை. மேலும், இன்றைய அறிவியலாளர்கள் ஞாயிறை விட 320 மடங்கு பெரிய, 1 கோடி மடங்கு ஒளி வீசக்கூடிய, இதுவரை வானியல் அறிஞர்களே கண்டிராத மிகப்பெரிய விண்மீனை லண்டனில் உள்ள "ஷெபீல்ட்' வானியல் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவ்விண்மீனுக்கு மான்ஸ்டர் ஸ்டார் (ராட்சத நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ளனர். இக்கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாக தொல் மனிதர்களின் வானியல் கண்டுபிடிப்பே அடிப்படை ஆகும். உலகில் உள்ள தொன்மையான மனித இனங்களில் ஒன்றான தமிழினம் தமக்கென வானியல் கொள்கையை சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.

பழந்தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாகக் கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள். தமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார், கனிமேதாவியார், பக்குடுக்கை நன்கணியார் முதலிய பெயர்கள் சான்று பகர்கின்றன. சிலேட்டர் என்னும் வானியல் அறிஞர் தமிழருடைய வானநூற்கணித முறையே வழக்கிலுள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்னும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது.

சங்கத் தமிழர் ஐம்பெரும் பூதங்களின் தோற்றங்களை வெளிப்படுத்தும்போது பரந்து விரிந்த வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியுள்ள அறிவியல் உண்மையை இவ்வுலகுக்குப் பதிவு செய்துள்ளனர்.

விசும்பில் ஊழூழ் செல்லக்
கருவளர் வானத்திசையில் தோன்றி
உருவறி வாரா ஒன்றன் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்
நுண்முறை வெள்ள மூழ்கி ஆர்தருபு
(பரிபாடல்:2)

இப்பாடலடிகள் முறையாகத் தோன்றும் ஊழிக் காலங்களை வெளிப்படுத்துகிறது. முறையே வானம் முதல் ஊழிக் காலத்திலும், காற்று இரண்டாம் ஊழியிலும், தீ மூன்றாம் ஊழியிலும், நீர் நான்காம் ஊழியிலும், நிலம் ஐந்தாம் ஊழியிலும் தோன்றிய நிகழ்வு இன்றைய அறிவியலாரும் உடன்படு கருத்தாகும்.

தமிழர் இவ்வுலகிலுள்ள உயிர்கள் நிலைத்து வாழ ஞாயிறே முதன்மைக் காரணம் என்பதை உணர்ந்திருந்தனர். தமிழரின் பொங்கல் திருநாள் ஞாயிறை முதன்மைப்படுத்துவது ஈண்டு நோக்கத்தக்கது. திருமுருகாற்றுப்படையின் தொடக்க வரிகள், உயிர்கள் மகிழ ஞாயிறு எழுவதாக நக்கீரர் பதிவு செய்கிறார்.

உலக முவப்பு வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
(திருமுருகு:1-3)

இங்கு, உலக உயிர்கள் ஞாயிறின் கதிர்களால் உயிர் வாழ்கின்றன. இல்லையேல் இவ்வுலகம் பனிமண்டி உலக அழிவு ஏற்படும் என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது. மேலும், நற்றிணை பாடலொன்று, ஞாயிறு இருளைப்போக்க அதன் உட்பகுதி நெருப்பினால் எரிந்து கொண்டிருக்கிறது என்றும் அதைச் சுற்றிலும் ஒளிப்படலம் உள்ளது என்றும் கூறுகிறது. அப்பாடலடிகள் வருமாறு.

வானம் மூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்தகங் கனலி ஞாயிறு
(நற்:163)

இதன் மூலம், பழந்தமிழர்கள் ஞாயிறை நெருப்புக் கோளம் என்கின்றனர். இன்றைய அறிவியல் அறிஞர்களும் ஞாயிறு வடிவமற்று எரிந்து கொண்டிருக்கின்ற நெருப்புக் கோளம் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய வானியலறிஞர்கள் ஞாயிறை ஒன்பது கோள்கள் சுற்றுவதாகக் கண்டறிந்துள்ளனர். இந்நிகழ்வின் எச்சத்தை சிறுபாணாற்றுப்படையில் காணமுடிகிறது.

வாணிற விசும்பின் கோண்மீன் சூழ்ந்த
விளங்கதிர் ஞாயி றெள்ளுந் தோற்றத்து
(சிறுபாண்: 242-43)

என்னும் வரிகள், ஞாயிறைச் சுற்றிலும் கோள்கள் சூழ்ந்துள்ள உண்மைப் பதிவைப் புலப்படுத்துகின்றன. இதன் மூலம் பல கோள்கள் ஞாயிறைச் சுற்றிவந்தன என்று தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால், பூமியை ஞாயிறின் கோளாக இவர்கள் கண்டறியவில்லை. மாறாக காட்சிப் பார்வையின் அடிப்படையில் பூமியை ஞாயிறும் சந்திரனும் சுற்றுவதாக நம்பினர். இதை,

குடதிசை மாய்ந்து குணமுதல் தோன்றிப்
பாயிருள் அகற்றும் பயங்கெழு பண்பின்
(பதிற்று: 22:33-34)

இங்கு, ஞாயிறு கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதையும், பூமி நிலையாக ஓரிடத்திலேயே இருப்பதாகவும் காட்சிப் பார்வையின் அடிப்படையில் அறிவியல் உண்மையை அறியாது இருந்த செய்தியும் வெளிப்பட்டு நிற்கிறது.

மேலும், திருப்பாவை 13, புறம்:26:1-2; புறம் 117:1-2; பதிற்றுப்பத்து 13:25-26; ஆகிய பாடல்கள் மூலமும் அறியமுடிகிறது.

தமிழரின் வானியல் அறிவு இன்றைய அறிவுசார் உலகுக்கு ஒரு முன்னோடி என்பதில் ஐயமில்லை.

நன்றி - தமிழ்மணி
Category: தமிழர் வரலாறு | Added by: pandu
Views: 522 | Downloads: 0 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]
Log In
Block title
Search
Polls
Rate my site
Total of answers: 49
live traffic feed

Copyright MyCorp © 2025 | Make a free website with uCoz